வடமாநிலங்களில் நடுங்க வைக்கும் குளிர் அலை, பனிப்பொழிவு

2 mins read
43f64799-a50b-4166-b9a6-3fc432925906
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வடஇந்தியாவில் கடும் குளிர் நிலவும். இந்தப் பனிப்பொழிவு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. - படம்: சமயம் ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: கடந்த சில நாள்களாக பல்வேறு வடமாநிலங்களைக் கடும் பனிப்பொழிவு வாட்டி வருகிறது. இந்தப் பனிப்பொழிவும் குளிர் அலையும் மேலும் சில நாள்கள் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வடஇந்தியாவில் கடும் குளிர் நிலவும். இந்தப் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டு வடமாநிலங்கள் அதிகப்படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, காஷ்மீரில் வெப்பநிலை ‘மைனஸ் 4.2 டிகிரி’யாக குறைந்துவிட்டது.

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியம் பகுதியை உறைபனி மூடியுள்ளது. இம்மாச்சலப் பிரதேசத்திலும் கடும் பனிப்பொழிவு நீடித்து வருவதால் அங்குள்ள பல நீர்நிலைகள், அருவிகள் உறைந்து போய்விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாயினர்.

இதையடுத்து இரு மாநிலங்களிலும் பள்ளி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பள்ளிகள் காலை 10 மணிக்குத் தொடங்கும் என அறிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் கடும் பனிப் பொழிவு நிலவுகிறது.

பெரும்பாலான இடங்களில் சாலைகள் மூடுபனி போல் காட்சியளிக்கின்றன. எதிரே வரும் வாகனங்கள் சரிவரத் தெரியாததால் வாகனமோட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கிடையே, அன்றாட வெப்பநிலை மேலும் இரண்டு டிகிரி குறைவாகப் பதிவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாநிலங்களில் குளிர் அலையின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாநிலங்கள் பலவும் கடந்த சில நாள்களாக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வடமாநிலங்கள் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நீடிப்பதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டெல்லியில் வீடற்றவர்கள் கடுங்குளிரால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்