கும்பமேளா பகுதியின் நிலத்தடி நீரில் தீவிர நச்சுக்கலப்பு: ஆய்வில் தகவல்

கும்பமேளா பகுதியின் நிலத்தடி நீரில் தீவிர நச்சுக்கலப்பு: ஆய்வில் தகவல்

கோப்புப் படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

12 Oct 2026 - 6:11 pm

2 mins read

நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் அமைந்துள்ள கும்பமேளா பகுதிக்கு அருகே நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நிலத்தடி நீரில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெற்காசிய அணைகள், ஆறுகள், மனிதர்கள் வலைப்பின்னல் கட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

நாசிக் அருகே உள்ள அம்பாட் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனையில், நிலத்தடி நீரில் ‘ஹெக்சாவலன்ட் குரோமியம்’ (Hexavalent Chromium) என்ற ஆபத்தான வேதிப்பொருள் லிட்டருக்கு 50.3 மி.கிராம் என்ற அளவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, குடிநீரில் இதன் அளவு 0.05 மி.கிராம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்போது 1,000 மடங்குக்கும் அதிகமாக இந்த நச்சு கலந்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மாநகராட்சியின் முறையற்ற குடிநீர் விநியோகம் காரணமாக, வேறு வழியின்றி இந்த நச்சு கலந்த நீரையே அம்பாட்வாசிகள் பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் தோல் புண்கள், கொப்புளங்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரு பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நச்சு நீர் உள்ளூர் வடிகால்கள் வழியாக கோதாவரி ஆற்றில் கலக்கிறது. இக்கழிவுகள் கலக்கும் நதிக்கரையில்தான் விரைவில் கும்பமேளா விழா நடைபெறவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வரவுள்ள நிலையில், நதியில் கலக்கும் இந்த நச்சு நீர் பெரும் சுகாதாரச் சீர்கேட்டை விளைவிக்கும் என அஞ்சப்படுகிறது.

தொழிற்சாலைக் கழிவுகளே இந்த மாசுபாட்டுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், புகார் அளித்தும் மகாராஷ்டிர மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்