ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் திங்கட்கிழமை (ஜூலை 28) தொடங்கிய நிலையில், அதற்குப் பிறகு பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்த பலதரப்புப் பிரதிநிதிக் குழுக்களில் அங்கம் வகித்த தலைவர்களைக் காங்கிரஸ் தனது பேச்சாளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
“அந்தப் பிரதிநிதிக் குழுக்கள் வெளிநாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசுக்கு ஆதரவாகப் பேசின. இப்போது, எதிர்க்கட்சிகள் மற்றும் இந்திய மக்களின் கவலைகளை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது, எனவே, கட்சி அவையில் பேசப் புதியவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது” என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது.
அந்தப் பிரதிநிதிக் குழுக்களில் இடம் பெற்றிருந்த தலைவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர்களான சல்மான் குர்ஷித் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் தற்போது எம்.பி.க்களாக இல்லை. இருப்பினும், சசி தரூர், மணீஷ் திவாரி மற்றும் அமர் சிங் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விவாதத்தில் பேசக் காங்கிரஸால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

