கெளகாத்தி: புகழ்பெற்ற அசாமியப் பாடகர் ஜுபீன் கார்க் மரணம் தொடர்பாக இந்தியாவின் சிறப்பு விசாரணைக் குழு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
அசாம் மாநிலத்தின் கெளகாத்தி நகரில் உள்ள தலைமை நடுவர் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழு ஆவணங்களைச் சமர்ப்பித்தது.
3,500 பக்கங்கள் கொண்ட அந்தக் குற்றப் பத்திரிகையைச் சிறப்பு விசாரணைக் குழுவின் ராஸி கலிடா மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
அதிகாரிகள் சமர்ப்பித்த ஆவணத்தில் நால்வர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்களில் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷியாம்கனு மகந்தாவும் ஒருவர்.
சித்தார்த்தா சர்மா, சேகர் ஜோதி கோசுவாமி, அம்ரித்பிரவா மகந்தா ஆகியோர் மற்ற மூவர். இவர்கள் மூவரும் பாடகர் ஜுபீன் கார்கிற்கு நெருக்கமானவர்கள்.
பாடகர் ஜுபீன் கார்க் மரணம் தொடர்பாக மேலும் மூவர் சந்தேகத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பாடகரின் உறவினரும் காவல்துறை அதிகாரியுமான சந்தீபன் கார்க்.
சந்தீபன் கார்க் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்மீது நோக்கமில்லா கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மற்ற இருவர்மீதும் நம்பிக்கை மோசடி, கொலை செய்யத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பாடகர் ஜுபீன் கார்க் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி சிங்கப்பூரில் மர்மமான சூழலில் உயிரிழந்தார். சிங்கப்பூரில் நடைபெறவிருந்த வடகிழக்கு இந்திய விழாவில் அவர் கலந்துகொள்ளவிருந்தார்.
பாடகர் ஜுபீன் கார்க் உயிரிழந்த நேரத்தில், “இது திட்டமிடப்பட்ட கொலை, இதில் உள்நோக்கம் உள்ளது,” என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா குற்றஞ்சாட்டினார். அதன் பின்னர் அவர் சிறப்பு விசாரணைக் குழுவைப் பணியமர்த்தி வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார்.
3,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கிட்டத்தட்ட 300 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைத் தகவல்கள் உள்ளன. மேலும் அதில் பாடகரின் உடல்கூறாய்வு ஆவணங்கள், சிங்கப்பூரில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆகியவையும் உள்ளன.

