சிங்கப்பூரில் மாண்ட பாடகர் உடல் தகனம்: லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்

சிங்கப்பூரில் மாண்ட பாடகர் உடல் தகனம்: லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்

1 of 3
படம்: இந்தியா டுடே
படம்: இந்தியா டுடே
படம்: இந்திய ஊடகம்

23 Sep 2025 - 6:56 pm

2 mins read

கவ்காத்தி: பிரபல அசாமிய பாடகர் ஜுபீன் கார்க்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) நண்பகல் தகனம் செய்யப்பட்டது.

அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீருடன், அவரது இதயத்திற்கு நெருக்கமான பாடலான ‘மாயாபினி’ பாடலின் வரிகளைப் பாடினர்.

அசாமி, ஹிந்தி, வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஜுபீன் கார்க், 52, சிங்கப்பூரில் நீச்சலில் ஈடுபட்டபோது மூச்சுத்திணறி செப்டம்பர் 19ஆம் தேதி மரணமடைந்தார்.

சிங்கப்பூரில் உடற்கூராய்வுக்குப் பிறகு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட அவரது உடல், அசாம் தலைநகர் கவ்காத்தி மைதானத்தில் வைக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, கவ்காத்தி மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையில் அவரது மரணத்தில் எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக இரண்டாவது முறையாக ஜுபீன் கார்க்கின் உடல் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது.

அதன் பிறகு ஜுபீன் கார்க்கின் உடலுக்கு பாரம்பரிய ‘அசாமிய கமோசா’ துணி போர்த்தப்பட்டு, இறுதிச் சடங்குக்காக ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது.

கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கமர்குச்சி கிராமத்தில் ஜுபீன் கார்க்கின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, கமர்குச்சி கிராமத்தில் ஜுபீன் கார்க்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஜுபீன் கார்க்கின் அன்பான செல்லப் பிராணிகளான வளர்ப்பு நாய்கள் இகோ, தியா, ராம்போ, மாயாவை அவரது குடும்பத்தினர் இறுதி பிரியாவிடைக்காக அழைத்து வந்தனர்.

அசாம் அரிதாகக் கண்ட இந்தக் காட்சி, அனைத்து வயதினரிடமும் ஜுபீன் கார்க் காட்டிய அன்பு, மரியாதையை வெளிப்படுத்தியது.

மேகாலயாவில் பிறந்த ஜுபீன், 1990களின் முற்பகுதியில் அசாமின் இசைத் துறையில் நுழைந்தார். இம்ரான் ஹாஷ்மி நடித்த கேங்ஸ்டர் (2006) படத்தில் அவர் பாடிய ‘யா அலி’ பாடல் இளைஞர்கள் மத்தியில் அவர் மிகப்பெரிய பிரபலமாகத் திகழ வழிவகுத்தது.

குறிப்புச் சொற்கள்
பாடகர்அஞ்சலிசிங்கப்பூர்