‘எஸ்ஐஆர்’ என்பது ஜனநாயகத்துக்கு எதிரான சதித் திட்டம்: சமாஜ்வாடி

2 mins read
48be4ec2-0789-47d5-8299-cdf80ddf151a
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக குரல் கொடுக்கும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். - படம்: ஊடகம்

லக்னோ: ‘எஸ்ஐஆர்’ என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி என்பது இந்திய குடிமக்களுக்கு எதிரான சதித்திட்டம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார். எனவே, பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் கட்சிகள் உடனடியாக, அக்கட்சியுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ‘எஸ்ஐஆர்’ என்னும் மோசடியை நிறுத்தி மக்களைக் காப்பாற்ற முடியும் என்று சூளுரைத்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் ‘எஸ்ஐஆர்’ பணி ஒரு மோசமான சதித்திட்டம். இதன் மூலம் மக்கள் பழைய காலனித்துவக் காலத்துக்கு தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இருபது வினாடிகள் பார்க்கக்கூடிய காணொளி ஒன்றை தமது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 27) வெளியிட்டார். அதில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒன்றிணைந்து பாஜகவின் இந்த மாபெரும் சதித்திட்டத்தை வெளிக்கொணர வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேட்டுக் கொண்டார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரான சதித் திட்டம். எனவே, குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அகிலேஷ் கேட்டுக் கொண்டார்.

இந்த எஸ்ஐஆர் மூலம் இன்றைக்கு வாக்குகள் வெட்டப்படுகின்றன. நாளைக்கு உங்களுடைய நிலங்களுக்கான பதிவேடுகள், ரேஷன் அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், இடஒதுக்கீடுகள் போன்றவற்றில் இருந்தும் உங்கள் பெயர்கள் நீக்கப்படலாம். எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழகத்திலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இருந்தபோதும், தேர்தல் ஆணையம், இந்தப் பணியை கடந்த அக்டோபர் இறுதி வாரம் தொடங்கியது. 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரை 68,467 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழக வாக்காளர்களுக்குக் கணக்கீட்டுப் படிவங்களை விநியோகம் செய்து பூர்த்தி செய்து வாங்கி மின்னியல் முறையில் உள்ளீடு செய்வார்கள்.

குறிப்புச் சொற்கள்