பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஆறு தடங்களைக் கொண்டுள்ள ஆந்தா-சிமாரியா பாலம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) திறக்கப்படவுள்ளது.
கங்கை நதிக்கு மேல் அமைந்துள்ள இப்பாலம் 1.8 கிலோமீட்டர் நீளம்கொண்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாலத்தைத் திறந்துவைப்பார்.
புதிய பாலத்தின் மூலம் பீகாரின் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு இடையே கனரக வாகனங்கள் மேற்கொள்ளும் பயணத்தின் தூரம் சுமார் 100 கிலோமீட்டர் குறையும் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. பாட்னா மாவட்டத்தில் உள்ள மொக்காமா நகருக்கும் பெகுருசாய் நகருக்கும் இடையே இந்தப் பாலம் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது.
திரு மோடி, 2017ஆம் ஆண்டு இப்பாலத்துக்கு அடித்தளம் அமைத்தார். தேசிய விரைவுச்சாலை 31ல் இது அங்கம் வகிக்கிறது.
ஏற்கெனவே இருக்கும் இரு தள ரயில், சாலைப் பாலமான ‘ராஜேந்திர சேது’வுக்கு அருகே இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘ராஜேந்திர சேது’ பாலத்தில் பல பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது.
‘சிமாரியா தாம்’ எனும் பிரபல வழிபாட்டுத் தலத்துக்குப் போகவும் இப்பாலம் கூடுதல் வசதியாக அமைகிறது.