மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் தங்கத்தைப் பொடி செய்து கடத்திய மூன்று இந்தியப் பயணிகளை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருளோடு தங்கத் துகள்களைக் கலந்து நவீன முறையில் அவர்கள் தங்கத்தைக் கடத்த முயற்சி செய்துள்ளனர். அதன் மதிப்பு ஏறக்குறைய 14.81 கோடி ரூபாய். அத்தனையும் தங்கப் பொடியாக இருந்தது.
கடந்த வாரம் இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் (டிஆர்ஐ) சுங்கத் துறையின் புலனாய்வுப் பிரிவும் (ஏஐயு) அதிரடியாக நடத்திய சோதனையில் அவர்கள் சிக்கியதாக டெக்கான் ஹெரால்ட் தகவல் வெளியிட்டிருந்தது.
மூவரும் துபாயிலிருந்து வந்தவர்கள்.
“அவர்களது உடைமைகளைச் சோதனையிட்டபோது மிகவும் அதிநவீன, வழக்கத்திற்கு மாறான முறையில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. சோதனையில் சிக்காமல் இருக்க வெளிநாட்டுத் தங்கம் நுண் பொடியாக மாற்றப்பட்டு அதே நிறம், தன்மை, அடர்த்தி கொண்ட பாக்கெட் உணவுப் பொருட்களுடன் மிகவும் துல்லியமாகக் கலக்கப்பட்டிருந்தது,” என்று அதிகாரிகள் கூறினர்.
“பால் மாவு, ஓட்ஸ், பிற மாவு வகைகள், தேங்காய்ப் பால் மாவு போன்ற சாதாரண உணவுப் பொட்டலங்களுடன் இந்தத் தங்கப் பொடி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த மூன்று பயணிகளின் உடைமைகளிலிருந்தும் தங்கப் பொடி கலந்த சுமார் 33.50 கிலோ எடையுள்ள உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவோடு உணவாகக் கலக்கப்பட்டிருந்த தங்கத் தூள் பிரித்தெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் பரிசோதித்ததில் ஏறக்குறைய14.81 கோடி ரூபாய் மதிப்பிலான 9.40 கிலோ வெளிநாட்டுத் தங்கம் மீட்கப்பட்டது.
1962ஆம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, மூன்று பயணிகளும் ஒரே தங்கக் கடத்தல் கும்பலின் சார்பாகச் செயல்பட்டதை ஒப்புக்கொண்டனர்.
“சோதனைகளிலிருந்து தப்பிப்பதற்காகப் பொடி செய்யப்பட்ட தங்கம் பல்வேறு பாக்கெட் உணவுப் பொருள்களுடன் புத்திசாலித்தனமாகக் கலந்து தங்கக் கடத்தலில் ஒரு புதிய, அதிநவீன முறையைக் கடத்தல்காரர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்,” என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
