பயனர்களின் பதிவுகளுக்குச் சமூக ஊடகங்கள் பொறுப்பு: அஸ்வினி வைஷ்ணவ்

1 mins read
c29e7c90-187b-421d-8210-ec6ce732d9f1
சிங்கப்பூரில் நடந்த புளூம்பெர்க் புதிய பொருளியல் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். - படம்: புளூம்பெர்க் புதிய பொருளியல் மாநாடு

புதுடெல்லி: சமூக ஊடகப் பயனர்கள் பதிவிடும் செய்திகளுக்கு அந்நிறுவனங்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என இந்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் நடந்த புளூம்பெர்க் புதிய பொருளியல் மாநாட்டில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், சமூக ஊடகங்கள் தாங்கள் செயல்படும் நாட்டின் சமூகக் கட்டமைப்பைப் புரிந்துகொண்டு, அந்நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றார் அவர். சமூக ஊடக நிறுவனங்களுக்கும், சமூகத்திற்கும் இடையிலான நம்பிக்கை குறைந்து வருவது மிகவும் கவலையளிப்பதாகக் கூறிய திரு வைஷ்ணவ், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான பதிவுகள், பெருகிவரும் வதந்திகள் காரணமாகச் சமூக ஊடகங்கள்மீதான நம்பிக்கை முற்றிலும் உடைந்து வருகிறது என்றார்.

எனவே பயனர்கள் வெளியிடும் பதிவுகளுக்குச் சமூக ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

“தொழில்நுட்பம் மிக விரைவாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். இதுபோன்ற சூழல்களில், அனைத்து விவகாரங்களுக்கும் ஏற்ற ஒரே சட்டத்தைக் கொண்டிருக்க முடியாது. எனவே மக்களுக்கு வழிகாட்டுதலை உருவாக்கும்போது அதைச் சமூக ஊடகத் தளங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்,” என அமைச்சர் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்