மூணாறு: இந்தியாவின் கேரள மாநிலத்தில் அடுத்த வாரம் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கி இருக்கிறார் சோனியா காந்தி. ஆனால், இவர் அனைவரும் அறிந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அல்லர்!
மூணாறு ஊராட்சிக்குட்பட்ட நல்லதண்ணி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக 34 வயது சோனியா காந்தி போட்டியிடுகிறார்.
பெயரில்தான் ஒற்றுமை இருக்கிறதே தவிர, காங்கிரஸ் கட்சித் தலைவியின் அரசியலுக்கு எதிரானவர் இந்த சோனியா.
இவருடைய தந்தையார் துரைராஜ் தீவிர காங்கிரஸ் தொண்டர். அதனால்தான், தங்கள் கட்சித் தலைவியின் பெயரையே தன் மகளுக்கும் அவர் சூட்டினார்.
ஆயினும், பாஜக ஆதரவாளரான சுபாஷ் என்பவரை மணந்தபின் சோனியாவும் அணி மாறினார். சுபாஷும் ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் மூலக்காடு பகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது, காவித் துண்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டு வீடு வீடாகச் சென்று, “நான் சோனியா காந்தி,” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, பாஜகவிற்கு ஆதரவாக இவர் வாக்கு திரட்டுகிறார்.
இவர் போட்டியிடும் நல்லதண்ணி பகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மஞ்சுளா ரமேஷும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வளர்மதியும் களமிறங்கியுள்ளனர்.
கடந்த முறை நல்லதண்ணி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷர்மிளா பீவி வெற்றிபெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
கேரளத்தில் டிசம்பர் 9, 11 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இது அடுத்த ஆண்டு அங்கு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

