நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த தங்களது தாயின் உடலை அடக்கம் செய்வதற்கு பணம் இல்லாததால், பெற்ற மகன்களே அவரது உடலை ஒரு சாக்குப் பையில் கட்டி தைலமரத் தோப்பில் வீசிச் சென்றுள்ளது காவலர்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாகை மாவட்டம், வடக்குபொய்கைநல்லூரில் உள்ளது தியாகராஜன் என்பவரின் தைலமரத் தோப்பு. இங்கு கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசவே இதுகுறித்து மக்கள் நாகை மாவட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.
காவலர்களுக்கு மூட்டைக்குள் பெண்ணின் அழுகிய சடலம் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், சடலமாக இருந்தது வேளாங்கண்ணி ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த உசேன் மனைவி மும்தாஜ் (75) என்பது தெரியவந்தது.
உசேன்- மும்தாஜ் தம்பதிக்கு சையது (45), சுல்தான் இப்ராஹிம் (43) என்ற இரு மகன்களும் ஜீனத்தம்மாள் (54) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் மூவருமே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.
தேநீர் கடையில் வேலை பார்த்து வந்த உசேனின் வருமானத்தை மட்டுமே நம்பி குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக கடந்த ஏப்ரலில் உசேன் உயிரிழந்தார். தொடர்ந்து, அண்மையில் மும்தாஜும் உயிரிழந்தார்.
அவரது மகன்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவலர்கள் தெரிவித்தனர்.