புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களத்தில் நிலைமை சீராக உள்ளது என்றும் அரசியல் தலைவர்கள் தேவையின்றி அச்சத்தைக் கிளப்புகின்றனர் என்றும் தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஆனால், களநிலைமை வேறாக உள்ளது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (பிஎல்ஓ) கடுமையான நெருக்கடி கொடுக்கப்படுவதாக மனுதாரர்கள் கூறினர். அந்த அழுத்தம் தாங்காமல் பிஎல்ஓக்களில் பலர் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
திமுக, கேரள காங்கிரஸ் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தோலா சென் உள்ளிட்டோர் மனுதாரர்களில் சிலர்.
கேரளத்தில் டிசம்பர் 9, 11 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருப்பதால் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசாங்கமும் மனுதாக்கல் செய்துள்ளது.
சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு அதிகாரிகளைப் பணியமர்த்துவதன்மூலம் உள்ளாட்சித் தேர்தலைச் சீராக நடத்த முடியாது என்று அது தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
அம்மனுவை டிசம்பர் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக மனுதாரர்கள் சிலரது சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், தங்களது மனுக்களையும் அவசர மனுக்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். விட்டுவிட்டு மழை பெய்துவருவதாலும் புயல் அறிவிப்பு வெளியாகியுள்ளதாலும் பிஎல்ஓக்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு சார்ந்த மனுக்கள் டிசம்பர் 4ஆம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் டிசம்பர் 9ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளன.

