இம்பால்: மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அங்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், 13 காவல்நிலைய எல்லைப் பகுதிகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அருணாச்சலப் பிரதேசத்தின் திராப், சங்லாங், லாங்டிங் ஆகிய மாவட்டங்களிலும் அம்மாநிலத்தின் மூன்று காவல் நிலைய எல்லைப் பகுதிகளிலும் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஆயுதப்படை சிறப்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் தற்போது அதிபர் ஆட்சி அமலில் உள்ளது. அங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது. இதை நீக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அங்கு இரு பிரிவினருக்கு இடையே கடந்த 2023 மே மாதம் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
இதையடுத்து, கலவரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு இச்சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

