இந்திய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடருக்குப் பதில் சிறப்புக் கூட்டம்

இந்திய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடருக்குப் பதில் சிறப்புக் கூட்டம்

படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

26 Nov 2026 - 4:43 pm

2 mins read

புதுடெல்லி: நடப்பாண்டு இந்திய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேரப் பற்றாக்குறை, வரவிருக்கும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக, தனித்த குளிர்காலக் கூட்டத்தொடருக்குப் பதிலாக, மழைக்காலக் கூட்டத்தொடரின் நீட்டிக்கப்பட்ட சிறப்பு அமர்வை இரண்டு முதல் மூன்று நாள்கள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமான நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குக் குறைந்தபட்சம் 14 நாள்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 13ஆம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட அவை இன்னும் முழுமையாக முடக்கப்படாத நிலையில், மக்களவை விதியின்கீழ் குறுகியகால அறிவிப்பில் சபாநாயகரால் சிறப்பு அமர்வு கூட்டப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 1 அல்லது 2ஆம் தேதிக்குப் பிறகு, டிசம்பர் 3 முதல் 5 வரை அல்லது டிசம்பர் 6ஆம் தேதி இந்தச் சிறப்பு அமர்வு நடைபெறக்கூடும் என்ற பேச்சு டெல்லி அரசியல் களத்தில் வலுத்துள்ளது.

மறுபுறம், டிசம்பர் 8ஆம் தேதி பஞ்சாப்பில் பாஜக, ஷிரோமணி அகாலி தளம் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட மாநாட்டிற்கு முன்பாகவும் இந்த அமர்வு கூட்டப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

இக்கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப் மசோதா மக்களவை, மாநிலச் சட்டமன்றங்களில் மகளிர்க்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற அரசு தீவிரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 361 வாக்குகள் தேவைப்படும் நிலையில், இரு அவைகளிலும் தேவையான பலத்தைத் திரட்டும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்