இயற்கை வேளாண்மையை உடனடியாகத் தொடங்குங்கள்: இந்திய விவசாயிகளுக்கு மோடி அறிவுறுத்து

2 mins read
b8b600d4-c5c4-492b-9412-49f698d772bf
தமிழகத்தில் கம்பு, சாமை, கேரளா மற்றும் கர்நாடகாவில் கேழ்வரகு ஆகிய சிறுதானியங்கள் தலைமுறை தலைமுறையாக நமது உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன என்றார் பிரதமர் மோடி. - படம்: பிஐபி

கோவை: இந்திய விவசாயிகள் தங்கள் விளைநிலத்தின் ஒரு பகுதியில் இயற்கை வேளாண்மையை உடனடியாகத் தொடங்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய அவர், இயற்கை வேளாண்மை என்பது தன் மனத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு விஷயம் என்றார்.

இயற்கை விவசாயத்தில் உலகளாவிய மையமாக மாறும் பாதையில் இந்தியா உள்ளதாக திரு மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

வேளாண் மாநாட்டுக்கு வந்ததன் மூலம் தாம் நிறைய கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக விவசாயிகளின் துணிச்சலையும் மாற்றத்தைத் தழுவும் அவர்களின் வலிமையையும் தாம் மனதார வணங்குவதாகத் தெரிவித்தார்.

வரும் ஆண்டுகளில் இந்திய விவசாயத்தில் பல பெரிய மாற்றங்கள் நிகழும் என்பதை தாம் உணர்வதாகவும், இந்தியாவின் பல்லுயிர் பெருக்கம் புதிய வடிவத்தை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்திய இளையர்கள் தற்போது விவசாயத்தை ஒரு நவீன வாய்ப்பாகப் பார்ப்பதாகக் கூறினார்.

இது நாட்டின் கிராமப்புற பொருளியலுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கப் போகிறது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இம்மாநாட்டிற்கு வந்துள்ள சில விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன். சிலர் இயந்திர பொறியியல் அல்லது முனைவர் பட்டங்களைப் படித்து விவசாயத்தைத் தொடர்கின்றனர். சிலர் நாசாவில் தங்கள் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்கிறார்கள்.

“அது மட்டுமல்லாமல், அவர்கள் பல விவசாயிகளைத் தயார்படுத்தி இளையர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். இந்த நிகழ்வுக்கு நான் வரவில்லை என்றால், என் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களைத் தவறவிட்டிருப்பேன் என்பதை இன்று நான் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்றார் பிரதமர் மோடி.

கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் முழு விவசாயத் துறையும் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு ஆட்பட்டுள்ளதாகவும் இந்திய விவசாய ஏற்றுமதி கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளதாகவும் அவர் கூறினார். விவசாயத்தை நவீனமயமாக்க, விவசாயிகளை ஆதரிக்க அரசாங்கம் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த வேளாண் மாநாடு நாட்டில் இயற்கை விவசாயத்திற்கு ஒரு புதிய திசையை வழங்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாகக் குறிப்பட்ட அவர், புதிய யோசனைகளும் புதிய தீர்வுகளும் இங்கிருந்து வெளிப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

“இயற்கை விவசாயம் என்பது இந்தியாவின் சொந்த பூர்வீகக் கருத்தாகும். நாம் அதை எங்கிருந்தும் இறக்குமதி செய்யவில்லை. இது நமது பாரம்பரியத்திலிருந்து பிறந்தது, நமது முன்னோர்களால் தவம் இருந்து உருவாக்கப்பட்டது.

“தென்னிந்தியாவில் விவசாயிகள் பஞ்சகாவ்யா, ஜீவாமிருதம் போன்ற இயற்கை விவசாய முறைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

“தமிழ்நாட்டில் முருகன் கடவுளுக்கு தேனும் தினை மாவும் வழங்கப்படுகிறது. இது தேன், தினை எனும் சிறுதானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும்.

“தமிழகத்தில் கம்பு, சாமை, கேரளா மற்றும் கர்நாடகாவில் கேழ்வரகு ஆகிய சிறுதானியங்கள் தலைமுறைத் தலைமுறையாக நமது உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இந்த அற்புதமான உணவு வகைகளை உலகச் சந்தைகளுக்குக் கொண்டுசெல்ல இந்திய அரசு பாடுபடுகிறது,” என்றார் மோடி.

குறிப்புச் சொற்கள்