புதுடெல்லி: அனல் காற்றின் கடுமை தாங்காமல் இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மட்டும் சுமார் 17 ஆயிரம் பேர் மாண்டுள்ளனர்.
1971 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அனல் காற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் எம்.ராஜீவன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பல வானிலை நிபுணர்களின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
அதில், இந்தியாவில் கடந்த 1971 முதல் 2019ஆம் ஆண்டு வரை கடும் வானிலை நிகழ்வுகளால் 141,308 பேர் பலியாகிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் அனல் காற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை மட்டும் 17,362 என்றும் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில்தான் அனல் காற்று அதிகமானோரை காவு வாங்கியுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமவெளி பகுதிகளில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகும் நிகழ்வுகள், அனல் காற்றாக வகைப்படுத்தப்படுகின்றன.
அதிக வெப்பநிலையால் ஏற்படக் கூடிய உடல் பாதிப்புகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் நாடு முழுவதும் தற்போது அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது.