மதுபானக்கூடத்தின் பாதாள அறையில் இருந்து 17 ஆபாச நடன அழகிகள் மீட்பு

2 mins read
74923a52-533d-4f81-b5a1-231d9bd1868e
பாதாள அறையில் இருந்து மீட்கப்படும் நடன அழகிகள். காணொளிப் படம் -

மதுபானக்கூடம் ஒன்றின் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 நடன அழகிகளை போலிசார் மீட்ட சம்பவம் மும்பையின் அந்தேரி பகுதியில் நிகழ்ந்தது.

'தீபா' என்ற மதுபானக்கூடத்தில் சட்டவிரோதமாக பல நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சமூக குற்றத்தடுப்புப் பிரிவு போலிசாருக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அந்த மதுபானக்கூடத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு பெண்கள் எவரும் அதிகாரிகளின் கண்ணில் தென்படவில்லை. இதுகுறித்து அங்குள்ள ஊழியர்களிடம் காவல்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். ஆனால், அதிகாரிகளிடம் ஊழியர்கள் உண்மையைக் கக்கவில்லை.

இந்தநிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழகை அதிகாலை சமூக குற்றத்தடுப்பு பிரிவுத் துணை ஆணையர் அங்கு சென்றார். மதுபானக்கூடத்தில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அங்கிருந்த ஓர் அறையில் பொிய அளவில் கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள், அந்தக் கண்ணாடியை உடைத்தனர்.

அந்தக் கண்ணாடிக்குப் பின்புறம் சிறிய கதவு இருந்தது தெரியவந்தது. அந்தக் கதவை திறந்தபோது, உள்ளே குறுகிய பாதாள அறை இருந்ததை அதிகாரிகள் கண்டனர். அந்த அறைக்குள் அறைகுறை ஆடைகளுடன் நடன அழகிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் நீண்ட நேரம் அறைக்குள்ளே இருக்கும் வகையில், அழகிகளுக்கு தேவையான குடிநீர், குளிர்பானம், உணவு வகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

அந்தப் பாதாள அறையில் இருந்த 17 நடன அழகிகளையும் அதிகாரிகள் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து மதுபானக்கூட மேலாளர், காசாளர், ஊழியர்கள் மூவர் ஆகியோரைக் கைது செய்தனர். மதுபானக்கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.