திருவனந்தபுரம்: தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக மலையாள நடிகர் திலீப் மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என திலீப் தரப்பு தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
கேரளாவில் முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017ஆம் ஆண்டு தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், அதை காணொளியில் பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பான விசாரணையின் முடிவில் மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப்தான் அந்த நடிகையைக் கடத்தியதாகத் தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
80 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், கேரள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மேலும், வழக்குக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளை திலீப் மிரட்டியதாகவும் அவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.
மலையாள திரைப்பட இயக்குநர் பாலசந்தர் தொலைக்காட்சிப் பேட்டியில் இந்தத் தகவல் உண்மை என்று கூறியதை அடுத்து, கேரள காவல்துறையின் இணைய குற்றப்பிரிவு அதிகாரிகள் திலீப் மீது மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அவரது சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் கைதாகினர். இந்த வழக்கு பொய்யானது என்றும் இதை ரத்து செய்யவில்லை எனில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் திலீப் தரப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திலீப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இருந்ததாகக் கூறினர்.
காவல்துறை தொடர்ந்து வழக்கை நடத்தலாம் என்று உத்தரவிட்டனர்.
கொலை முயற்சி வழக்கில் திலீப்பின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்குத் தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மலையாளத் திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.