புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள 'யங் இந்தியா' நிறுவனம், 'நேஷனல் ஹெரால்ட்' பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.
இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றதாகக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடா்ந்தாா். இந்த மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, பவன் குமாா் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள 'நேஷனல் ஹெரால்ட்'' அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சாடியுள்ளது. மேலும், நாட்டின் பிரதான எதிர்க்கட்சி மீதான தொடர்ச்சியான தாக்குதலின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை எனவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

