புனே: மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பிரசவத்தில் பெண் குழந்தையைப் பெற்றெடுக் கும் தாயிடம் கட்டணம் எதுவும் பெறாமல் இலவசமாக மருத்துவச் சேவை வழங்கி வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஹதப்சார் என்ற பகுதியில் மகப்பேறு, பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வருகிறார் மருத்துவர் கணேஷ் ராக்.
அதிகளவில் பெண் குழந்தைகளை இந்த உலகிற்கு கொண்டு வர பெற்றோரை ஊக்குவிக்கும் முயற்சியாக பெண் குழந்தைகள் பிறந்தால் இந்த மருத்துவமனையில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பிறக்கும் குழந்தைகளை ஒரு தேவதையாகவும் வரவேற்று உற்சாகப்படுத்துகின்றனர் மருத்துவமனை நிர்வாகத்தினர்.
கடந்த 11 ஆண்டுகளாக இது வரை பிறந்துள்ள ஏறக்குறைய 2,400 பெண் குழந்தைகளுக்கு மருத்துவமனைக் கட்டணம் என்று எதுவும் வசூலிக்காமல், இலவசமாக பிரசவம் பார்க்கப்பட்டு தாயும் சேயும் வீடு திரும்புகின்றனர்.
இதுபற்றி மருத்துவர் கணேஷ் ராக் கூறும்போது, "இதுவரை எனது மருத்துவமனையில் 2,430 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதற் காக பெற்றோரிடம் சிகிச்சை கட்டணம் என எதுவும் பெற்றதில்லை.
"எங்கள் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறக்கும்போதெல்லாம் அதனைச் சிறப்புடன் கொண்டாடுகிறோம். பலூன், பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்து, கேக் வெட்டி, பெற்றோர் மீது பூக்களைத் தூவி மகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.
"தாயும் சேயும் மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பும்போது, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் வீடு வரை கொண்டுசென்று விட்டு வரவும் ஏற்பாடு செய்து தருகிறோம்," என்கிறார்.
நாட்டில் நிலவும் பெண் சிசுக் கொலை பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 2012ல் இம்முயற்சியைத் தொடங்கினோம்.
அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த 10 ஆண்டுகளில் 6 கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப் பட்டுள்ளன. இதுபோன்ற விழிப்புணர்வு முயற்சிகளால்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும் என நம்புவதாகவும் கணேஷ் ராக் தெரிவித்துள்ளார்.