புதுடெல்லி: தன் மகளைக் கொடூரமாகக் கொன்ற காதலனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 26 வயதான ஷ்ரதாவை அவரது காதலன் அஃப்தாப் அண்மையில் கொலை செய்துள்ளார். மேலும், ஷ்ரதாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் வீசியுள்ளார்.
இதன் மூலம் இந்தக் கொலை விவகாரத்தை காவல்துறையால் கண்டுபிடிக்க இயலாது என அவர் கருதியுள்ளார்.
இந்நிலையில், தன் மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என ஷ்ரதாவின் தந்தை டெல்லி காவல்துறையில் புகார் அளிக்க, அதன் அடிப்படையில் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன.
அஃப்தாப்புக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்புள்ளது தெரியவந்ததால் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அஃப்தாப்பை அவர் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
"இதனால் கோபமடைந்த அஃப்தாப், தினமும் இரவு நேரத்தில் ஷ்ரதாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். காதலனுக்காக பெற்றோரை எதிர்த்து வீட்டில் இருந்து வெளியேறியதால், தனது இக்கட்டான நிலைகுறித்து பெற்றோரிடம் ஷ்ரதாவால் எந்த விவரத்தையும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.
"இதனால் தமது பள்ளிப் பருவ நண்பரான லட்சுமணன் என்பவரிடம் நடந்த அனைத்தையும் பகிர்ந்துள்ளார். அவர் மூலம் ஷ்ரதாவின் மூத்த சகோதரருக்கு அனைத்தும் தெரியவந்தது. இதன் பிறகே ஷ்ரதாவின் தந்தை காவல்துறையை அணுகியுள்ளார்," என காவல்துறை தரப்பில் கூறப்படுவதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.
ஷ்ரதாவுடனான வாக்குவாதமும் சண்டையும் முற்றிவிட்ட நிலையில், வீட்டில் இருந்த தலையணையைக் கொண்டு அவரது வாய், மூக்கை நீண்ட நேரம் அழுத்தியுள்ளார் அஃப்தாப். இதில் மூச்சுத்திணறி ஷ்ரதா இறந்துபோக, அதன் பிறகு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி புதிதாக ஒரு குளிர்பதனப் பெட்டி வாங்கி அதில் வைத்துள்ளார் அஃப்தாப்.
பல வாரங்களுக்கு முன்பே ஷ்ரதா கொல்லப்பட்டதால், அவரது உடலில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அஃப்தாப் தினமும் ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்துள்ளார்.
அமெரிக்க இணையத்தொடர் ஒன்றை பார்த்த பிறகே தன் காதலியை இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யும் எண்ணம் தமக்கு ஏற்பட்டதாக அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்பே தனது நண்பர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ஷ்ரதா. அப்போது அஃப்தாப் தம்மை கொலை செய்ய வாய்ப்புள்ளதாகவும் தம்மைக் காப்பாற்றும்படியும் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. சில நண்பர்கள் ஷ்ரதாவை தேடி வீட்டுக்கு வந்தபோது, அஃப்தாப் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்டி அடித்துள்ளார்.
இதற்கிடையே, ஷ்ரதாவின் உடல் பாகங்களை வீசியதாக அஃப்தாப் குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று அந்த பாகங்களைக் கண்டெடுக்க காவல்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஷ்ரதாவின் தலைப்பகுதியும் அவரது உடலை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் இன்னும் கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்தது.

