ராஞ்சி: மருத்துவமனை வளாகம் ஒன்றில் அதிகாலை வேளையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மருத்துவ தம்பதியர் உயிரிழந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் ஆறு பேர் பலியானதாகவும் 25 நோயாளிகள் உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்பாத் மாவட்டத்தில் இயங்கி வரும் ஹஜ்ரா நினைவு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனை வளாகத்தில் சிறிய குடியிருப்புப் பகுதியும் அமைந்துள்ளது.
மருத்துவர் விகாஸ் ஹஜ்ராவும் அவரது மனைவியும் மருத்துவருமான பிரேமாவும் அங்கு வசித்து வந்தனர். அவர்களின் வீட்டுப் பணியாளரான தாராவும் உறவினர் ஒருவரும் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் இந்தக் குடியிருப்புப் பகுதியில் தீப்பிடித்தது. அடுத்த சில நிமிடங்களில் வேகமாகப் பரவிய தீயால் பெரும் புகை மூண்டது. வீட்டில் அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்த மருத்துவர் ஹஜ்ரா உள்ளிட்டோர் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். கடும் புகைமூட்டம் காரணமாக அவரும் அவரது மனைவி, உறவினர், வீட்டுப் பணியாளர் உள்ளிட்ட ஐந்து பேர் மூச்சுத் திணறி அடுத்தடுத்து உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இடிபாடுகளில் சிக்கிய ஒருவர், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரித கதியில் செயல்பட்டு நோயாளிகளை மீட்டனர். மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

