வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருப்போர் சுயநினைவை இழந்தாலோ சுயமாக முடிவெடுக்கும் திறனை இழந்தாலோ அவர் சார்பாக அவரால் குறிப்பிடப்படும் வேறொருவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கும் சட்டபூர்வமான ஆவணம் 'லிவிங் வில்' அல்லது மேம்பட்ட மருத்துவ அதிகாரக் குறிப்பு எனப்படுகிறது.
'கருணைக் கொலை' எனும் முறையின்கீழ் நோயாளியின் வாழ்நாளை நீட்டிக்கும் மருத்துவ சிகிச்சைகளை நிறுத்துவது தொடர்பில் முடிவெடுக்க இது வழிவகுக்கிறது.
இந்தச் சட்டரீதியான ஆவணத்தை ஒருவர் தயாரிப்பதற்கு உரிய விதிகளை இந்திய உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
நீதிபதிக்குப் பதில், அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் முன்னிலையில் இனி இத்தகைய உயிலை எழுதலாம்.
இதனையடுத்து தேசிய அளவில் முதல்முறையாக மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் இத்தகைய உயிலை எழுதியுள்ளார்.
மகப்பேற்று மருத்துவரான 53 வயது நிக்கில் தத்தார், அந்திமக்காலத்தில் முடிவெடுக்கும் திறனை இழக்க நேரிட்டால் தனக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்துத் தன் சார்பாகத் தனது மனைவி முடிவெடுக்கலாமென உயிலில் தெரிவித்துள்ளார்.