அதானி முறைகேடு விவகாரத்தை விசாரிக்க வலியுறுத்து
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் வரவுசெலவுக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி முறைகேடு விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஆளுங்கட்சி போன்ற காரணங்களால் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் நாடாளுமன்றம் முடங்கியது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம், தனது பங்குகளின் விலையை உயர்த்திக் காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்து வருகிறது.
அதானி முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒன்றுகூடுவதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடுப்புகளையும் அமைத்திருந்தனர்.
இருப்பினும், எதிர்க்கட்சியினர் தடையை மீறி நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒன்றுதிரண்டு அங்கிருந்து பேரணியாகச் சென்று அதானி முறைகேடு குறித்து புகாரளிக்க அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கிச் சென்றனர்.
அனுமதி இன்றி பேரணியாகச் சென்றதால் எதிர்க்கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
புதன்கிழமை நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைமையில் திமுக, இடதுசாரி, சமாஜ்வாடி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. எதிர்க்கட்சியினர் நடத்திய இந்தப் பேரணியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கவில்லை.