மும்பை: நாக்பூரில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணை தேள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மாதம் நடந்த இந்தச் சம்பவத்தை அந்த விமான நிறுவனம் உறுதி செய்தது.
தேள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் பயணி ஒருவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். "கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் AI 630-இல் பயணித்த பெண்ணை தேள் கொட்டியது. இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது மிகவும் அரிதான ஒன்று ஆகும்," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் தேள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விமானத்தில் வேறு ஏதேனும் பூச்சிகள் நுழைவதைத் தடுக்கும் வகையில், புகையடிக்கப்பட்டது.
அத்துடன் விமானத்தின் உணவுத் துறையிடம் அவர்களது பகுதியை முழுமையாக சோதனை செய்ய ஏர் இந்தியா வலியுறுத்தியது.
உணவுப் பொருட்களால் தேள் விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்பதால், அந்தப் பகுதியில் தேவைப்படும் பட்சத்தில் புகை போடவும் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தது.

