கோபால்கஞ்ச்: பீகார், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 150 தொழிலாளர்கள் தாங்கள் நைஜீரியாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிஎன்என்-நியூஸ் 18 ஊடகத்துக்கு அவர்கள் அனுப்பி யுள்ள காணொளிச் செய்தியில், தாங்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய உதவிகளைச் செய்து தரும்படி இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
நைஜீரியாவில் தங்களைப் பணியமர்த்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகள் முறையாகச் சம்பளம், உணவு, மருத்துவ வசதிகளை வழங்குவதில்லை எனவும் இந்திய ஊழியர் கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நைஜீரியா நாட்டின் லேக்கி நகரில் 'தி டாங்கோட்' எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றுவதற்காக கடந்த 2019ல் 150 இந்திய ஊழியர்கள் சென்ற னர். ஆனால், அவர்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காணொளியில் பேசிய ஊழியர் ஒருவர், "பிரதமர் மோடி அவர்களுக்கு, நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பி வர விரும்பு கிறோம். எங்களது சம்பளத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் தர மறுக்கிறது. எங்களை மீட்க நட வடிக்கை எடுக்கவேண்டும்," என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் நேவல் கிஷோர் சவுத்ரி கூறும் போது, "நைஜீரிய நிறுவனத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் 11 பேர் பணியாற்றுகின்றனர். அவர் களது குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஊழியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
நைஜீரியாவில் சிக்கியுள்ள அனைத்து ஊழியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என எம்.பி. அலோக் குமார் சுமன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.