தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், ஜூன் 3ஆம் தேதி, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியில் இணைந்தார்.
இதையடுத்து, அன்றைய தினமே அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றார். அவரோடு, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் பிளவை ஏற்படுத்தியுள்ளார் என குற்றம் சாட்டிவரும் சரத் பவார், கட்சியை மீண்டும் கட்டமைக்கப்போவதாக முன்னதாக அறிவித்திருந்தார்.
பாஜக கூட்டணியில் சேர்ந்து அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்த சரத்பவார் ஆதரவு தேசியவாத காங்கிரஸ் கட்சி, அமைச்சர்களாகப் பதவி ஏற்ற அனைவரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி மகாராஷ்டிர சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.
கட்சி பிளவுபட்டுள்ள இந்நிலையில், மும்பையில் மந்த்ராலயாவுக்கு எதிரே, அஜித் பவார் புதிய அலுவலகத்தைத் தொடங்கியுள்ளது அக்கட்சியில் மேலும் குழப்பத்தை விளைவித்துள்ளது.
சரத் பவார் தரப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அக்கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவரான ஜெயந்த் பாட்டீலை நீக்குவதாகவும் அவருக்குப் பதிலாக மகாராஷ்டிரா மாநிலத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் தட்காரே நியமிக்கப்படுவதாகவும் அஜித் பவார் தரப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டாக உடைந்துகிடக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் சரத்பவார், அஜித் பவார் என இரண்டு தலைவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகளால் குழப்பமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபுல் படேல், “தேசியவாத காங்கிரசின் சட்டமன்றக் குழு தலைவராக அஜித்பவார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் அமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற அனில் பாட்டீல், சட்டமன்றத்தின் கட்சி கொறடாவாக தொடருவார்.
தொடர்புடைய செய்திகள்
“ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஆதரிப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒருமித்த கூட்டு முடிவாகும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் ஆசிர்வாதத்தை நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறியுள்ளார்.