தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்கு மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி

2 mins read
a2a560b2-1410-422a-a1a5-bccc80cb76d3
தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்,  சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஜூலை 7ஆம் தேதி சத்தீஸ்கர், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கும் ஜூலை 8ஆம் தேதி தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மோடி செல்கிறார்.

தமது சுற்றுப்பயணத்தின் போது திரு மோடி ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக தக்கவைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. 

அதனால் நாட்டில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்துவருகிறது.

குறிப்பாக, அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் நடைபெறும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 3-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், 2024 தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, நாடு முழுவதும் ரூ.13 லட்சம் கோடி மதிப்பிலான சுமார் 900 திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும் என உள் கட்டமைப்புத் துறை அமைச்சகங்கள் சார்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதன்படி, வரும் 2024 பிப்ரவரி மாதத்துக்குள் ரூ.7.6 லட்சம் கோடி மதிப்பிலான 560 திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும் எனத் தெரிகிறது. இதுபோல, ரூ.5.6 லட்சம் கோடி மதிப்பிலான 350 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும் எனத் தெரிகிறது.

ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, கோரக்பூர் ரயில் நிலையத்தின் மறுமேம்பாடு,  நாக்பூர்-விஜயவாடா நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் திரு மோடி.

குறிப்புச் சொற்கள்