நொய்டா: மின்தூக்கி இணைப்பு அறுந்து எட்டு மாடி உயரத்தில் இருந்து விழுந்ததில் 73 வயது மூதாட்டி மரணமடைந்தார்.
இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. பின் தலையில் அடிபட்ட நிலையில் ஃபெலிக்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
அவரது பின்தலையில் அடிப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மின்தூக்கி திடீரென்று கீழே விழுந்த அதிர்ச்சியில் அந்த மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
சுசிலா தேவி என்று அடையாளம் காணப்பட்ட அவர், நொய்டாவின் பாராஸ் டையரீ என்னும் பகுதியில் டவர் 24 என்னும் குடியிருப்புக் கட்டடத்தில் மகன், மருமகளுடன் வசித்து வந்ததாக காவல்துறையினர் கூறினர்.
24 மாடி கொண்ட அந்தக் கட்டடத்தின் எட்டாவது மாடியில் சுசிலா தேவி குடியிருந்தார். வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தமது வீட்டிலிருந்து கீழே செல்ல மின்தூக்கியைப் பயன்படுத்தியபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
குழந்தை ஒன்றும் அந்த மூதாட்டியுடன் இருந்ததாகக் கூறப்பட்டபோதிலும் அதனை உறுதிப்படுத்தும் தகவல் இல்லை.
மின்தூக்கி அறுந்து விழுந்தது தொடர்பாக குடியிருப்புக் கட்டட நிர்வாகத்தின் மீது மூதாட்டின் குடும்பம் காவல்துறையில் புகார் செய்துள்ளது.