புதுடெல்லி: உலக மருத்துவக் கல்விக் கூட்டமைப்பின் அங்கீகார அந்தஸ்து, இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்குக் கிடைத்து இருக்கிறது.
அந்த அங்கீகாரத்தை இந்திய ஆணையம் 10 ஆண்டுகளுக்குப் பெற்று இருப்பதாக புதுடெல்லியில் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அந்த அங்கீகாரம் கிடைத்து இருப்பதால் இந்திய மருத்துவ பட்டதாரிகள் இதர நாடுகளில் முதுநிலை பட்டப் படிப்பு பயிற்சியைப் பெறலாம். மருத்துவ தொழிலையும் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற இந்த உலக அமைப்பின் அங்கீகாரம் தேவை என்று கருதுகின்ற நாடுகளில் இந்திய மருத்துவர்கள் தொழிலில் ஈடுபடலாம் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.
உலக அமைப்பின் அங்கீகாரம் கிடைத்து இருப்பதால் இந்தியாவில் இப்போது செயல்படும் 706 மருத்துவக் கல்லூரிகளும் அந்த அங்கீகாரத்தைப் பெற்றவையாகக் கருதப்படும்.
அதோடு மட்டுமன்றி, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் புதிதாக அமையக்கூடிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அங்கீகாரம் தானாகவே கிடைத்துவிடும்.
இந்தியாவில் செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகங்களின் தரம் உலகளவில் அங்கீகரிக்கப்படுவதால் அனைத்துலக மாணவர்கள் இந்தியா வந்து படிக்க ஊக்கம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதோடு மட்டுமன்றி, உலகத்திலேயே தலைசிறந்த நடைமுறைகளையும் உன்னத மேம்பாடுகளையும் பெற்று அதன்மூலம் இந்திய மருத்துவக் கல்வியின் தரம் மேலும் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உலக மருத்துவக் கல்விக் கூட்டமைப்பு என்ற அமைப்பு உலகம் முழுவதும் மருத்துவக் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காகச் செயல்படுகிறது.
மனிதகுலத்திற்கு இன்னும் சிறந்த சுகாதாரப் பராமரிப்பு வசதியை ஏற்படுத்தித் தருவதே அந்தக் கூட்டமைப்பின் இலக்காகும்.
அமெரிக்காவில் வெளிநாட்டு மருத்துவக் கல்வி ஆணையம் என்ற ஓர் அமைப்பு செயல்படுகிறது. அந்த அமைப்பு, அனைத்துலக மருத்துவப் பட்டதாரிகளுக்கு உரிமம் வழங்குவதன் தொடர்பிலான கொள்கைகளையும் விதிமுறைகளையும் மேற்பார்வையிடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.