தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

4,000 உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்துள்ள டெல்லி இளம்பெண்

2 mins read
fe74ba79-721e-4cfc-9e51-6de5e7c29de0
பூஜா சர்மா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: பூஜா சர்மா என்ற இளம்பெண் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,000 ஆதரவற்றோரின் உடல்களைப் பெற்று கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளார்.

இந்தப் பணியால் மனநிறைவு கிடைக்கும் அதேவேளையில், பல சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகவும் பூஜா சர்மா, 26, கூறுகிறார்.

சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள பூஜா, டெல்லி ஷாத்ரா பகுதியில் தனது தந்தை, பாட்டியுடன் வசித்து வருகிறார்.

மருத்துவமனைகளில் நீண்ட காலமாகக் கேட்பாரற்று இருக்கும் உடல்களைப் பெற்று அவற்றுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்து வருகிறார்.

இதுகுறித்து பூஜா சர்மா கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 4,000 உடல்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளேன்.

“இவர்கள் அனைவருமே ஆதரவற்றவர்கள் அல்லது குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள்.

“கடந்த 2022ல் ஒரு சிறிய சண்டையில் எனது 30 வயதான அண்ணன் என் கண் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

“இதையறிந்த எனது தந்தையும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது முதல் பிறருக்கு உதவ வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் காவல்துறை, அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு ஆதரவற்றவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து வருகிறேன்.

“இறுதிச் சடங்குகள் செய்வதற்கு ஓர் உடலுக்கு ரூ.1,000 முதல் 1,200 வரை செலவாகிறது. எனது பாட்டிக்கு வரும் பென்ஷன் தொகையில் இருந்து இந்தச் செலவை சமாளிக்கிறேன்,” என்கிறார் பூஜா.

பலர் தான் செய்யும் இந்த வேலையை ஒரு தடைக்கல்லாகப் பார்ப்பதாகவும் தனக்கான திருமண வாய்ப்புகள் தள்ளிப் போவதாகவும் தனது நண்பர்கள் தன்னைச் சந்திப்பதை அவர்களது குடும்பத்தினர் தடுப்பதாகவும் கூறி வேதனைப்படுகிறார் பூஜா சர்மா.

குறிப்புச் சொற்கள்