ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது

2 mins read
bcb434f9-fabb-4b72-aff1-43c5bc9f9dbe
உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்த முசாவிர் ஹுசைன் ஷாசிப் (வலது), குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட அப்துல் மதீன் அகமது தாஹா. - படம்: எக்ஸ் தளம்

கோல்கத்தா: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்தது. இந்தச் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட இருவரை கோல்கத்தாவில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தக் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்குத் தலா 10 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என என்ஐஏ அதிகாரிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான அப்துல் மதீன் அகமது தாஹா, 30, முசாவிர் ஹூசைன் ஹாசிப்,30, ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இப்போது அவர்களைக் கைது செய்துள்ளனர்.

இவர்களில், முசாவிர் ஹூசைன் ஹாசெப்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்து வெடிக்கச் செய்தவர் என்றும் அப்துல் மதீன் அகமது தாஹா குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்றும் என்ஐஏ அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள‌ ஒயிட் பீல்டு பகுதியில் ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனையாகும் மசாலா தோசைக்காக தினமும் ஆயிரக்கணக்கிலான வாடிக்கையாளர்கள் குவிவது வழக்கம்.

இந்நிலையில், மார்ச் 1ஆம் தேதி பட்டப்பகலில் இந்த உணவகத்தில் அடுத்தடுத்த குண்டுகள் வெடித்தன. இதில் பத்துப் பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவலர்களும் தேசியப் புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சோதனை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான முசாவிர் ஷபீர் உசேன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள், மின்னிலக்கச் சாதனங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இப்போது பிடிபட்டுள்ள இரு குற்றவாளிகள் தொடர்பாக கர்நாடக மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இவ்விரு முக்கிய குற்றவாளிகளையும் கைது செய்ததன் மூலம், பயங்கரவாத கட்டமைப்பு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக நம்புகிறோம்.

“இருப்பினும் இவர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கோல்கத்தா உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக அதிகமானோரை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். என்பதால், இதுகுறித்து விசாரிக்கப்பட உள்ளது,” எனத் தெரிவித்தார். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்