புதுடெல்லி: டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உபரி நீரை டெல்லிக்கு விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 137 கியூசெக்ஸ் நீரை கூடுதலாக இமாச்சல் அரசாங்கம் விடுவிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த தகவலை ஹரியானா மாநில அரசிடம் இமாச்சல் தெரிவிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் சுட்டுக்காட்டியுள்ளது.
குடிநீரை வாஜிராபாத் அணை வழியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை மேற்கொள்ள ஹரியானா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல் அரசாங்கம் வழங்கும் நீரை டெல்லி அரசு வீணாக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உத்தரப் பிரதேசம், இமாச்சல் மற்றும் ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென கோரி உச்ச நீதிமன்றத்தில் டெல்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு மனு தாக்கல் செய்தது. அதன்பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது.
பாஜக தலைமை தங்களது உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசிடம் பேசி நீர் வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க டெல்லி அரசு போர்க்கால அடிப்படையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் அது பெரிய அளவில் பலன் தரவில்லை என டெல்லி மக்கள் கவலை தெரிவித்தனர்.

