கேரள தேர்தலில் ஆர்வம் காட்டாத மக்கள்: திருவனந்தபுரத்தில் 15 ஆண்டு காணாத வாக்கு சரிவு

2 mins read
6b64bc3f-16d6-49af-8898-98f58867a502
ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்கக் காத்திருந்த கேரள மக்கள். - படம்: மாத்ருபூமி

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதை வாக்குப் பதிவுகள் உணர்த்துகின்றன.

கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

எஞ்சிய பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பர் 11) வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இரண்டு கட்டத் தேர்தலும் நடைபெற்று முடிந்த பின்னர் அதில் பதிவான வாக்குகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

மாநிலம் முழுவதும் 73.69 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கடுமையான சமூக இடைவெளி கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான 75.95 விழுக்காடு வாக்குகளையும்விட தற்போது குறைவான வாக்குகளே பதிவாகி உள்ளன.

குறிப்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின்போது திருவனந்தபுரம் மாநகராட்சியில் 58.29 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. இது கடந்த 15 ஆண்டுகளில் அந்த மாநகராட்சித் தேர்தலில் பதிவான ஆகக் குறைந்த வாக்கு விகிதம்.

இதற்கு முன்னர், கடந்த 2010ஆம் ஆண்டு 60 முதல் 63 விழுக்காடு வரை பதிவான வாக்குகளே திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் ஆகக் குறைந்த வாக்கு விகிதமாக இருந்து வந்தது. தற்போது அதைக் காட்டிலும் குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதிலும் குறிப்பாக, அந்த மாநகராட்சியின் சில வார்டுகளில் 45 விழுக்காட்டுக்கும் குறைவான மக்களே வாக்களித்து உள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதை வாக்குப் பதிவு விகிதம் உணர்த்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் உள்ள 604 உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அவற்றில் உள்ள 12,931 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏறத்தாழ 1.53 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை (டிசம்பர் 13) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்