திருவனந்தபுரம்: சபரிமலை ஆன்மிகப் பயணத்தில் பக்தர்கள் சிரமமின்றியும் கூட்ட நெரிசலில் சிக்காமலும் சாமி தரிசனம் செய்வதற்கு திருவிதாங்கூர் ஆலய வாரியமும் மற்றும் பத்தினம்திட்டா காவல்துறையும் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அவ்வகையில், இணையம் வழி பதிவு செய்து வருகை தரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக, உடனடிப் பதிவு (ஸ்பாட் புக்கிங்) எண்ணிக்கை 5,000 ஆகக் குறைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்ததால் கடந்த வாரத்தில் சன்னிதானம், பம்பை மட்டுமின்றி மலைப்பாதையிலும் கூட்ட நெரிசல் எற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்குவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது. மேலும் பம்பை உள்ளிட்ட மூன்று இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன.
ஆலய வாரியத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் உடனடி முன்பதிவு மூலமாகச் சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலும் இல்லை. உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) எண்ணிக்கையை பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல் அதிகரித்துக்கொள்ள ஆலய வாரியத்திற்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனால் பக்தர்கள் வருகைக்குத் தகுந்தாற்போல் ‘ஸ்பாட் புக்கிங்’ மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்துள்ளது.

