தீர்ப்புகளை மாற்றி எழுதும் போக்கு அதிகரிப்பதாக உச்சநீதிமன்றம் கவலை

2 mins read
8a7f9d0d-f8b2-4276-8155-c2933f685a65
இந்திய உச்ச நீதிமன்றம். - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: ஒரு நீதிபதி அளிக்கும் தீா்ப்பை வேறு நீதிபதி மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர், தமது பிணை நிபந்தனைகளில் மாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை (நவம்பர் 26) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தால், அதே வழக்குகளை வேறு நீதிபதிகள் மீண்டும் விசாரித்து ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. இது வேதனையளிக்கிறது,” என்றனர்.

“ஏற்கெனவே தீர்ப்பளித்த நீதிபதி தொடர்ந்து பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்ட காலத்துக்கும் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்த காலத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை கருத்தில் கொள்ளாமலும் தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுகின்றன.

“ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பால் அதிருப்தி அடைந்தவா்களின் வேண்டுகோளை ஏற்று வேறு நீதிபதிகள் அல்லது சிறப்பாக அமைக்கப்பட்ட நீதிபதிகளின் அமர்வுகள் இவ்வாறு தீா்ப்புகளை மாற்றுகின்றன.

“ஒரு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், அதுதொடர்பான வழக்கில் வித்தியாசமான கண்ணோட்டம் ஏற்பட்டு அந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்ய அனுமதித்தால், அது அரசமைப்புச் சட்டப் பிரிவு 141ன் நோக்கத்தைத் தோல்வியடையச் செய்துவிடும்.

“ஓர் அமர்வு தீர்ப்பளித்த வழக்கை வேறு அமர்வு விசாரித்தால், அது வழக்கில் வேறு தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. அவ்வாறு செய்வது, நீதிமன்றத்தின் அதிகாரம், உரிமை மற்றும் தீர்ப்புகள் மீதான மதிப்பை வலுவிழக்கச் செய்யும்,” என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்