புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவை அமைத்தும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
“திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் ஒவ்வொரு பக்தரும் சனிக்கிழமை (நவம்பர் 28) தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிடுகிறோம்.
“மலை அமைந்துள்ள முழுப் பகுதியையும் சிஆர்பிஎஃப் பாதுகாப்புப் படையை நிறுத்தவும் உத்தரவிடப்படுகிறது. தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம்,” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய தொல்லியல் துறை சார்பில் கூறுகையில், “மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் இருக்க முடியாது. அறங்காவலர் குழுவின் அறிக்கையை காட்டி உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் போனது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு,” என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு திட்டமிட்டு மீறியதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
