ஜெய்ப்பூர்: மது போதையில் ‘யூடியூப்’ தளத்தில் உள்ள காணொளியைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் பெண் ஒருவர் பலியான சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மிஸ்ரா. போலி மருத்துவரான இவர், உள்ளூரில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், முனீஷ்ரா என்ற பெண் சிறுநீரகக் கல் பிரச்சினைக்காக இவரிடம் சிகிச்சை பெற வந்ததாகவும் அவரிடம் அறுவை சிகிச்சை செய்து கல்லை நீக்க வேண்டும் என்றும் பிரகாஷ் மிஸ்ரா கூறியதாகத் தெரிகிறது.
சிகிச்சைக்காக முன்பணமாக ரூ,20,000, பெற்றவர் தனது உறவினர் ஒருவருடன் இணைந்து அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டுள்ளார்.
மருத்துவம் தெரியாததால் யூடியூப் தளத்தில் வெளியான ஒரு காணொளியை பார்த்து அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது பிரகாஷ் மிஸ்ரா மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சையின்போது ஆழமாக வெட்டியதில், முனிஷ்ராவின் பல நரம்புகள் துண்டாயின. இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து முனிஷ்ராவின் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்ததுடன் பிரகாஷ் மிஸ்ராவின் கிளினிக்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரகாஷ் மிஸ்ரா தப்பியோடிவிட்டார்.

