உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்

1 mins read
a15cb411-7673-4d24-90aa-879fb690633f
நீதிபதி சூர்யகாந்த். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக திரு சூர்யகாந்த் பொறுப்பேற்றார்.

அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 2019இம் ஆண்டு மே 24ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி சூர்யகாந்த், இன்று தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ளார். அவர், 2027 பிப்ரவரி 9ஆம் தேதி வரை ஏறக்குறைய 15 மாதங்கள் இப்பதவியில் இருப்பார்.

63 வயதான சூர்யகாந்த் 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பிறந்தார். ஹரியானாவில் உள்ள ஹிஸார் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த பின்னர் 1984ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது நீதித்துறை வாழ்க்கையை தொடங்கினார் சூர்யகாந்த்.

பஞ்சாப், ஹரியானா மாநில உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ள அவர், 2018ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வுபெற்றதையடுத்து, சூர்யகாந்த் அப்பொறுப்புக்கு வந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை ரத்து செய்தது, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ உள்ளிட்ட பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதி சூர்யகாந்த் இடம்பெற்றிருந்தார்.

இறுதியாக மாநில அரசுகள் ஆளுநருக்கு அனுப்பும் மசோதாக்கள் தொடர்பான வழக்கிலும் திரு கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

குறிப்புச் சொற்கள்