புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தோக்கியோவுக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, புறப்படத் தயாரானபோது திடீரென ரத்து செய்யப்பட்டது.
நவம்பர் 24 ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு டெல்லியில் இருந்து ஏர்இந்தியாவின் ஏஐ358, போயிங் 787-8 ரக விமானம் தோக்கியோவுக்குப் புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழ, உடனடியாக அந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து கருத்துரைத்த ஏர்இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், இது வழக்கமான நடைமுறைதான் என்று கூறியுள்ளார்.
மேலும், விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது பயணிகளுக்கு வசதியின்மையைக் கொடுத்துள்ளது வருத்தத்திற்குரியது. இருப்பினும், நாங்கள் அவர்களுடைய பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பயணிகளில் சிலர் மாற்று விமானங்களில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்ததாகவும், சிலருக்கு தங்கும் வசதிகளை விமான நிறுவனம் ஏற்பாடு செய்துகொடுத்தது.

