ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் கிட்டத்தட்ட ரூ.926 கோடி இன்னும் செலுத்தப்படவில்லை.
அதிகமான அபராதத் தொகையைக் கட்டாமல் வாகன ஓட்டுநர்கள் இழுத்தடிப்பதால், அதனை மின்சாரக் கட்டணத்துடன் வசூலிக்க மாநில அரசு யோசித்து வருகிறது.
அதிவேகம், போக்குவரத்து விளக்கில் நிற்காமல் செல்வது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, இருக்கை வார் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தவறான பாதையில் வாகனத்தை ஓட்டுவது, வாகனம் ஓட்டும்போது கைப்பேசியில் பேசியவாறு செல்வது போன்றவை விதிமீறல்கள் ஆகும்.
அதுபோன்ற விதிமீறல்களுக்காக தெலுங்கானாவில் வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.1,332.42 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை அதில் 25 விழுக்காட்டினர் மட்டுமே அபராதத் தொகையைச் செலுத்தியுள்ளனர். எஞ்சிய ரூ.925.77 கோடி பாக்கி உள்ளது.
இதனை எவ்வாறு சம்பந்தப்பட்டவர்களின் மின்சாரக் கட்டணப் பட்டியலில் சேர்ப்பது என்பது குறித்து தெலுங்கானா போக்குவரத்துத் துறை ஆலோசித்து வருகிறது.
போக்குவரத்து விதிமீறல் அபராதத்தைச் செலுத்தாதவர்களிடமிருந்து மின்சாரக் கட்டணம் மூலம் அதனை வசூலிக்கலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தது.
அடிக்கடி விதிமீறலில் ஈடுபடுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் ஓர் ஆலோசனையை மாநில அரசுகளுக்கு வழங்கியது.
