கோவில் என்றால் கடவுள் சிலைகள் இருக்கும், அர்ச்சகர்கள் இருப்பார்கள், பூசைகள் நடக்கும், பிரசாதங்கள் வழங்குவார்கள் தானே...
ஆனால், கேரளாவிலுள்ள இந்தக் கோவில் முற்றிலும் வேறுபட்டது. இந்த வழிபாட்டுத் தலத்தில் புத்தகமே தெய்வம். புத்தகமே பிரசாதமாகவும் காணிக்கையாகவும் கொடுக்கப்படுகிறது. புத்தகத்திற்கென தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கும் அறிவுக் கோவில் இது.
கேரளாவின் கண்ணூரில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செருபுழா அருகே இருக்கிறது பிரபோயில் என்ற கிராமம். இங்குதான், ‘நவபுரம் மாதாதீதா தேவாலயம்’ உள்ளது. அதாவது ‘சமயச்சார்பற்ற கடவுளின் ஆலயம்’ என்பது இதன் அர்த்தம்.
இங்குதான் புத்தகம் தெய்வமாக வணங்கப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு இந்தப் புத்தகக் கோவில் திறக்கப்பட்டது. இது அறிவே தெய்வீகமானது என்ற நம்பிக்கையில் உருவான ஒன்று.
இதனுள் சாதி, சமய வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் சென்று வரலாம், பிரார்த்தனை செய்யலாம். இது அறிவின் தத்துவத்தை வழங்குவதுடன் உலகளாவிய அன்பையும் பணிவையும் போதிக்கிறது.
இந்தக் கோவிலின் நுழைவு வாயிலில் சுமார் 5,000 புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சில படிகள் மேலேறிச் சென்றால் புத்தகக் கோவிலை தரிசிக்கலாம்.
கோவிலில் வீற்றிருக்கும் புத்தகச் சிற்பத்தில், கடவுள் என்பது அறிவு என்றும் மதம் என்பது பரந்த சிந்தனை எனவும் பணிவான ஞானமே பாதை என்றும் மலையாளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் சில காட்டேஜ் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. இதற்கு ‘எழுத்துப்புரா’ என்று பெயர். இது எழுத்தாளர்கள் தங்கியிருந்து தங்கள் படைப்பை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கோவிலைக் கட்டியவர் பிரபோயில் நாராயணன். இவர் புத்தகங்கள் அறிவின் உருவகம் என்கிறார். புத்தகங்கள் தெய்வீகமானவை என்பதால் கோவிலை நிர்மாணித்ததாகச் சொல்கிறார்.
அவர் இந்த அறிவுக் கோவிலை உருவாக்க தன் இருபது வயதிலிருந்து சிந்தித்து வந்துள்ளார். அதற்காக ஒரு சிறு தொகையையும் தன் வருமானத்தில் ஒதுக்கி இருக்கிறார்.
தொடக்கத்தில் மருத்துவ ஆய்வு தொழில்நுட்பம் படித்துவிட்டு, மாணவர்களுக்கு ‘டியூசன்’ ஆசிரியராக இருந்தவர் நாராயணன். இதன்பிறகு செருபுழா நகரில் ஒரு கல்லூரியைத் தொடங்கினார். இந்தக் கல்லூரியில் அரசியல், சமூகவியல், வரலாறு, வணிகவியல், இந்தி, தத்துவம் உள்ளிட்ட படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
பிரபோயில் நாராயணனும் ஐந்து பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது எம்ஏ ஆங்கிலமும் படித்து வருகிறார். கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்.
இந்தக் கல்லூரியில் இருந்து கிடைக்கும் வருமானமே அவருக்கு இந்தக் கோவில் தொடங்க உதவியுள்ளது. இதற்காக அறு[Ϟ]பது லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளார். அவர் நன்கொடை பெற்றாலும்கூட அது போதுமானதாக இருக்கவில்லை. இருந்தும் எல்லா சிரமங்களையும் கடந்தே புத்தகக் கோவிலை எழுப்பியுள்ளார்.
இந்தக் கோவிலில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் ஆகிய இருமாதங்களில் கலாசாரத் திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் இலக்கிய விவாதங்கள், எழுத்தாளர்கள் சந்திப்பு பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள், பொது உரையாடல்கள், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் எனப் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
இதனுடன் நான்கு திராவிட மொழி எழுத்தாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இதற்கெல்லாம் நாராயணனுக்கு உதவியாக அவரின் நெருங்கிய நண்பர் சாபு மாலியேக்கல் இருக்கிறார். கூடவே கிராம மக்களும் உறுதுணையாக உள்ளனர்.
இந்தப் புத்தகக் கோவிலை ஒரு தன்னிறைவு பெற்ற நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதே நாராயணனின் குறிக்கோள். தற்போது இந்தப் புத்தகக் கோவி[Ϟ]லைப் பார்வையிட கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து பலர் வந்துபோகின்றனர்.


