பெங்களூரு: நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் நடந்த ஒன்பது திருட்டு சம்பவங்களில் நான்கு சம்பவங்கள் பெங்களூரு கெம்பே கவுடா அனைத்துலக விமான நிலையத்தில் பதிவாகி உள்ளதாக இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக தினமலர் இத்தகவலை வெளியிட்டிருந்தது.
மக்களவையில், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குர்ஜித் சிங் அஹுலாவின் கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் பதிலளித்தார்.
பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் ஜனவரி 1 முதல் நவம்பர் 27 வரை நான்கு திருட்டு வழக்குகளும், டெல்லி, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், ராஜ்கோட் விமான நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கும் பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவங்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் இருக்க வேண்டும் என சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்காணிக்க சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் விமானப் பாதுகாப்பு பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பயணிகளிடமிருந்து திருட்டு புகார்களைப் பெற சிஐஎஸ்எஃப் உதவி மையங்களை அமைத்துள்ளது. மத்திய பொது குறைதீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையத்தளம், ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு அமைப்பு இணையத்தளம் மற்றும் ‘ஏர் சேவா’ செயலிகளில் தங்களது உடைமைகள் திருடப்பட்டது தொடர்பாக பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் முரளிதர் மோஹோல் குறிப்பிட்டுள்ளார்.

