புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா இடையேயான 23வது உச்ச நிலை மாநாட்டிற்காக இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நவம்பர் 4ஆம் தேதி புதுடெல்லிக்கு வருகை தந்தார்.
தமது இரண்டு நாள் பயணத்தின் போது, அதிபர் புட்டின் பிரதமர் நரேந்திர மோடியுடன் நவம்பர் 5ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த வட்டார மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வர்த்தகம், பொருளியல், சுகாதாரம், கல்வி, கலாசாரம், ஊடகம் உள்ளிட்ட துறைகளில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தெரிகிறது.
புட்டின் பேட்டி
இதனிடையே, பிரதமர் மோடி அழுத்தத்திற்கு அடிபணியக்கூடியவர் அல்ல என புட்டின் தெரிவித்துள்ளார்.
தமது இந்தியப் பயணம் குறித்து ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை உலகம் கண்டுள்ளது என்றார்.
“இந்தியத் தலைமையைப் பற்றி நாடு பெருமை கொள்கிறது. பிரதமர் மோடி அழுத்தத்திற்கு அடிபணியக் கூடியவர் அல்ல. நண்பர் மோடியை சந்திக்க பயணம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா, ரஷ்யா உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க நிறைய இருக்கிறது.
“இந்தியா மிகக் குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. 7.7% வளர்ச்சியுடன் வேகமாக வளரும் பொருளியலைக் கொண்ட ஒரு சிறந்த நாடு. இது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒரு சாதனை.
“விண்வெளி ஆய்வு, அணுசக்தி, கப்பல் கட்டுமானம் மற்றும் விமான உற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து செயல்படுகின்றன,” என்று அதிபர் புட்டின் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது பயணத்துக்குப் பிறகு ரஷ்யாவிற்கான இந்திய ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து இந்தியா ஆண்டுதோறும் 65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருள்களை வாங்குகிறது. அதே நேரத்தில் இந்தியாவிலிருந்து ரஷ்யாவின் இறக்குமதி சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
ராணுவ ஒத்துழைப்புக் கூட்டம்
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட நிலையில் இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்புக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
இந்திய ரஷ்ய தற்காப்பு அமைச்சர்கள் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவர். இந்தக் கூட்டத்தின்போது இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ மற்றும் ராணுவ தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கான அம்சங்கள் குறித்து விரிவாக பேசப்பட இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்காப்புத் துறையில் இருநாடுகளுக்கும் இடையேயான பன்முக உறவுகளில் முழு அளவையும் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ரஷ்ய அமைச்சர் ஆண்ட்ரி செலோசோவும் மதிப்பாய்வு செய்ய இருப்பதாக இந்திய தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
பரஸ்பர ஆர்வம் உள்ள சமகால வட்டார, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இருதரப்பு கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளன.
முன்னதாக டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் ரஷ்ய அமைச்சர். கடமையின் போது உட்சபட்ச தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்துவார் என் தற்காப்பு அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
ராகுல் காந்தி புகார்
இந்நிலையில், அதிபர் புட்டினைச் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவரான தமக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேசுவது மரபாக இருந்து வந்தது என்றும் முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆட்சிக் காலங்களிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
“இந்தியா வரும் வெளிநாட்டுத் தலைவர்களை, பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சகமும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து விலக்கியே வைத்துள்ளது. போதிய பாதுகாப்பின்மையால் இதுபோன்று செய்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டிருப்பதை இந்த அரசு விரும்பவில்லை,” என்றார் ராகுல்.

