தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்றாவது ஆசியான் - இந்தியா இசைத் திருவிழா டெல்லியில் நிறைவு

2 mins read
திருவிழாவில் பன்னாட்டு இசை சங்கமம்
b4c06314-46b6-487e-848a-cf15478f2147
மூன்றாவது ஆசியான் - இந்தியா இசைத் திருவிழாவில் நிகழ்ச்சி படைக்கும் இசைக் குழுவினர். - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: ஆசியான்-இந்தியா இடையேயான பண்பாட்டுத் தொடர்புகளைப் பாராட்டும் மூன்றாவது ஆசியான்-இந்தியா இசைத் திருவிழா, இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை விமரிசையாக நடந்தேறியது.

‘செஹெர்’ எனும் பண்பாட்டு அமைப்புடனான கூட்டு முயற்சியில் இந்திய வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்த இத்திருவிழா புதுடெல்லியின் ஆகப் பழமையான கோட்டைகளில் ஒன்றான ‘புராணா கிலா’வில் நடைபெற்றது.

ஆசியான் நாடுகளின் தூதர்களின் முன்னிலையில், இந்திய வெளியுறவு துணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா திருவிழாவைத் தொடங்கிவைத்தார்.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய ஆசியா கொள்கையின் (Act East Policy) பத்தாண்டு நிறைவை 2024 குறிக்கிறது. இதை அனுசரிக்க, லாவோஸ் தலைநகர் வியந்தியனில் 2024 அக்டோபர் 10ஆம் தேதி நடந்த 21வது ஆசியான்-இந்தியா உச்சநிலைக் கூட்டத்தில், ஆசியான்-இந்தியா இசைத் திருவிழா உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்ததை இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட செய்தியறிக்கை சுட்டியது.

21ஆம் நூற்றாண்டை ‘ஆசிய நூற்றாண்டு’ என வர்ணித்த திரு மோடி, ஆசியாவின் எதிர்காலத்துக்கு வழிகாட்டுவதில் இந்தியா-ஆசியான் உறவுகள் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 10 இசைக் குழுக்களும் இந்தியாவின் ஐந்து இசைக் குழுக்களும் அசத்தலான படைப்புகளுடன் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டன.

இத்திருவிழாவை 15,000க்கும் மேற்பட்டோர் நேரில் கண்டுகளித்ததாக வெளியுறவு அமைச்சு கூறியது.

“இசை என்பது நமக்கு உத்வேகம் அளித்து ஒன்றிணைக்கும் பிரபஞ்ச மொழியாகும். ஆழமான பண்பாட்டுப் பந்தங்களைக் கொண்டுள்ள ஒரு வட்டாரத்திலிருந்து இசையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், இன்றைய தினம் மிகவும் சிறப்பானது,” என்றார் திரு மார்கெரிட்டா.

இந்தியாவும் ஆசியானும் அண்மையில் பல்வேறு உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளன.

நவம்பர் தொடக்கத்தில், ஆசியான்-இந்தியா Network of Think Tanks எட்டாவது வட்டமேசை மாநாட்டில் முக்கிய உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அனைத்துலகப் பொருளியலில் இந்தியாவும் ஆசியானும் மாபெரும் சக்திகளாக உருவெடுக்கலாம் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்