மும்பை: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் மிரட்டிப் பணம் பறித்தல், துப்பாக்கிச்சூடு, தீவைப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியினர் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கனடியக் காவல்துறை நடத்திய விரிவான விசாரணையின்மூலம் அந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (அக்டோபர் 1) சர்ரே நகரில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நபர் டொராண்டோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு கார் விற்பனை நிலையத்தின் உரிமையாளர்கள் பணம் கேட்டு மிரட்டப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைப் பணி தொடங்கியது.
அதில், சர்ரே நகரைச் சேர்ந்த சங்கேத் சிங்லா (23), சாஹில் (24), சிம்ரன்ஜீத் சிங் (24), ஹர்ஷ் (21), ஒட்டாவாவைச் சேர்ந்த ஜெக்தீப் சிங் (24) ஆகிய ஐந்து பேரின் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன.
சந்தேக நபர்கள்மீது மிரட்டிப் பணம் பறித்தல், துப்பாக்கியால் சுடுதல், தீவைப்பு, தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
விசாரணையின் போது, சிங்லா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அவரை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவர, கனடியக் குடிநுழைவு, எல்லைச் சேவை ஆணையம், அனைத்துலகக் காவல் தொடர்பு அதிகாரிகள் ஆகியோர் உதவினர்.
பின்னர் கனடா திரும்பிய சிங்லா உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார். தற்போது ஐந்து பேரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்தக் குழுவிடமிருந்து பல சட்டவிரோத ஆயுதங்களும், ஓபியம் போன்ற போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அந்த ஐவர் தொடர்பில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், மேற்கு கனடாவிலும் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
