கௌகாத்தி: இந்திய மாநிலமான அசாமில் அந்நாட்டின் பள்ளிச் சான்றிதழ்த் தேர்வுகள் மன்றத்தின் (ஐசிஎஸ்இ) பெயரில் போலியான பத்தாம் வகுப்புத் தேர்ச்சிச் சான்றிதழ்களை விற்பனை செய்த கும்பலுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வு ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து தவறாகப் பயன்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பாரத் கோர், தீப் குமார் சர்க்கார், உத்பால் தாஸ் என கைதான அம்மூவரும், பணத்திற்காகப் போலிப் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிச் சான்றிதழ்களை அவர்கள் விற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவை எவ்வாறு தயாரிக்கப்பட்டன, விநியோகத்திற்கு யார் ஏற்பாடு செய்தது, இதில் மேலும் பலருக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது.
அசாமில் மேல்நிலை முதலாமாண்டுப் படிப்புகளில் சேர சந்தேகத்திற்குரிய சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்ட பெரிய சர்ச்சையுடன் இவ்வழக்கு தொடர்புடையது.
அசாம் மாநிலப் பள்ளிக் கல்வி வாரியத்தின் இரண்டாம் பிரிவு நடத்திய சரிபார்ப்பில், 2025/26, 2026/27 கல்வியாண்டுகளில் இம்மன்றம் வழங்கியதாகக் கூறப்படும் சான்றிதழ்களைப் பயன்படுத்தி 4,934 மாணவர்கள் பதினோராம் வகுப்பில் சேர்ந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் 2025/26ஆம் ஆண்டில் 2,083 பேரும், 2026/27ஆம் ஆண்டில் 2,851 பேரும் சேர்ந்துள்ளனர்.
மன்றத்துடன் இணைக்கப்படாத 94 கல்வி நிலையங்கள் இச்சான்றிதழ்களை வழங்கியதும், அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் 28 பள்ளிகளுக்கு மட்டுமே இணைப்பு அங்கீகாரம் உள்ளதும் தெரியவந்துள்ளது.
மாவட்ட அளவிலும் இவ்விவகாரம் எதிரொலித்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் நகோன் மாவட்டத்தில் 88 கல்வி நிலையங்களில் 1,288 மாணவர்கள் தொடர்பான முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து 75க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளன.
கைதானவர்களுக்கும் விரிவான விநியோகக் கட்டமைப்புக்கும் உள்ள தொடர்பு, நிதிப் பரிவர்த்தனைகள், கல்வி நிலையங்கள் அல்லது இடைத்தரகர்களின் பங்கு குறித்து குற்றப் புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது.
