புதுடெல்லி: இந்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குவதில் இருந்து அங்கு இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் விலக்கு அளித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது எனச் சுட்டிக்காட்டி இந்த முடிவை அறிவித்துள்ளது.
இந்திய அரசின் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் ஜெனரல் துஷார் மேத்தா, நாடு முழுவதும் உள்ள 28,819 சிபிஎஸ்இ பள்ளிகளில் பெரும்பாலானவை மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தத் தயாராக உள்ளதாகவும் பெரும்பாலான மாணவர்கள் ஏற்கெனவே தங்களின் விருப்ப மொழிகளைத் தேர்வு செய்துவிட்டதாகவும் வாதிட்டார்.
மேலும் 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்றாவது மொழிக்கு மதிப்பெண் தேர்வுமுறை இருக்காது என்றும் பள்ளி அளவிலான மதிப்பீடு மட்டுமே செய்யப்படும் என்றும் அரசு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே விலக்கு, சலுகைகள் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை என்றும் மாணவர்களின் சான்றிதழில் அவர்கள் அத்தேர்வில் ‘பங்கேற்றார்கள்’ என்பது மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாடத்திட்ட சுமையைக் குறைத்து, நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய கற்றல் சூழலை உருவாக்க விரும்புவதாக நீதிபதிகள் தங்களின் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
