தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘11A’ விமான இருக்கை மீதான மோகம் நீடிப்பு; முந்திக்கொண்டு முன்பதிவு

2 mins read
9b5080fe-118d-4404-8d29-058396097bfb
பயணிகள், விமானப் பணியாளர்கள் ஆகியோர் உட்பட 260 பேர் மரணமடைந்த ஏர் இந்தியா விமான விபத்து. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஜூன் மாதம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான துயர விபத்தில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததால் அவர் பயணம் செய்த 11A என்னும் இருக்கைக்கு விமானப் பயணிகளிடையே தேவை அதிகமாக உள்ளது.

அந்த நிலவரம் குறித்து இந்தியாவின் பிரபல விமான நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் விவரித்தார்.

“விமானத்தின் 11 எண் கொண்ட இருக்கை மட்டுமல்ல, 11 எண் வரிசை முழுவதும் இன்னும் பயணிகளின் விருப்பமாக உள்ளது.

“11ஏ இருக்கையை பயணிகள் பணம் கொடுத்து முன்பதிவு செய்கின்றனர். ஒருவேளை அது கிடைக்காமல் போனால், 11 எண் வரிசையில் உள்ள மற்ற இருக்கைகளை அவர்கள் முந்திக்கொண்டு முன்பதிவு செய்கின்றனர்.

“எல்லா நாளிலும் அந்த வரிசை மட்டும் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை.

“11 எண் இருக்கையை அதிர்ஷ்டமானதாகவும் பாதுகாப்பானதாகவும் பயணிகள் கருதுவது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

“ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்துக்கு பின்னர் இந்த முன்பதிவு அதிசயம் நிகழ்கிறது,” என்றார் அந்த அதிகாரி.

விமானத்தில் தங்களுக்கு விருப்பமான இருக்கைகளைப் பெற பயணிகள் ரூ.200 முதல் ரூ.500 வரை அதிகமாகச் செலுத்த வேண்டும். 

விருப்பமான தெரிவாக 11 எண் இருக்கை இருப்பதால் அதற்கு மட்டும் கட்டணத்தை உயர்த்தும் சாத்தியம் உள்ளதா என்ற கேள்விக்குப் பதில் சொன்ன அதிகாரி, அப்படிப்பட்ட திட்டம் எதுவுமில்லை என்றார்.

மற்றொரு விமான நிறுவனமும் 11 எண் இருக்கைக்கு அதிகத் தேவை உள்ளதாகக் கூறியது. இருப்பினும், இதர இரு நிறுவனங்கள் அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்தில் அந்த விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் மரணமடைந்தனர். 41 வயது விஸ்வேஷ்குமார் ரமேஷ் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். விமானத்தின் அவசரவழிக்கு அருகில் இருந்த 11ஏ என்னும் இருக்கையில் அமர்ந்திருந்த அவர், வெளியே குதித்து சிறு காயங்களுடன் தப்பினார்.

குறிப்புச் சொற்கள்