கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் உயிரிழப்பு

கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் உயிரிழப்பு

படம்: ஈடிவி

08 Oct 2026 - 5:48 pm

2 mins read

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியின் சீமாபுரி பகுதியில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் நான்கு மாதக் கர்ப்பிணி பெண்ணும் 12 வயதுச் சிறுமி உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்குள் டெல்லியில் இரண்டு கட்டடங்கள் இவ்வாறு இடிந்து விழுந்தன.

புதன்கிழமை (அக்டோபர் 7) மதியம் 3.15 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது. கட்டடம் நொடிப்பொழுதில் சரிந்து விழுந்ததால், அப்பகுதியில் பெரும் பீதியும் பதற்றமும் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், டெல்லி காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

ஜேசிபி இயந்திரங்கள், மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி, அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

இதில் குலாப்ஷா (21) என்ற கர்ப்பிணி பெண், 12 வயதுச் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. படுகாயமடைந்த எட்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான துல்லியமான காரணம் குறித்து விரிவான கட்டமைப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து டெல்லி முதல்வர் அலுவலகம், மீட்பு, நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறுகலான சந்துகள் நிறைந்த பகுதியில் இச்சம்பவம் நடந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்